Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வில், அவர் தாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதைக் காட்டும் பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு காவல் நிலைய மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுமக்களுக்கு காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பு இல்லை, உள்ளேயும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.
பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களைக் காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும் கனிமொழி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய அவரது உறவினர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V