ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியம் – இனிகோ இருதயராஜ்
சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.) தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்
Iniko iruthayaraj


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)

தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பத்திரிகை சுதந்திரத்தின் அவசியத்தையும், ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தப் பதிவில், அதிகாரத்திற்கு எதிராகவும், நாட்டில் அன்பும் அமைதியும் நிலவுவதற்காகவும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில் ஊடகங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகளை நினைவுகூராமல் இந்த நாளைக் கடந்து செல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இணையதள முடக்கம், தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்குத் தடை, சமூக ஊடகங்களில் மக்கள் நலன் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகள் கவலை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஊடக அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ஒருபுறம் தொடரும் நிலையில், அதிகாரத்தில் இருப்பவர்களின் தூண்டுதலால் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருவதாக தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்படும்போது, ஆட்சியாளர்களின் அதிகாரம் கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இதன் விளைவாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் தகவல் தொடர்பு, கல்வி, வணிகம் உள்ளிட்ட அத்தியாவசிய செயல்பாடுகளும் முடங்கும் நிலை உருவாகும் என எச்சரித்துள்ளார்.

மேலும், மக்கள் தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்புகள் உருவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இனிவரும் காலங்களிலாவது ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நாடு வளம் பெறவும், ஆட்சியாளர்களின் அதிகாரம் எல்லை மீறாமல் இருக்கவும், நாட்டில் அன்பும் அமைதியும் நிலவவும் பத்திரிகைச் சுதந்திரம் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, சமூகத்தின் நலனுக்காகவும் ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களின் சிந்தனைகள் மேலும் செம்மையடையட்டும் என்றும், அவர்களின் எழுதுகோல்கள் என்றும் உயர்ந்து நிற்கட்டும் என்றும் இனிகோ இருதயராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V