Enter your Email Address to subscribe to our newsletters

புவனேஸ்வர், 16 நவம்பர் (ஹி.ச.)
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சத்பூஜை திருவிழாவின் இறுதி நாளான இன்று, குவாகாய் ஆற்றங்கரையில் அமைந்துள்ள படித்துறையில் ஏராளமான பக்தர்கள் திரண்டு உதய சூரியனுக்கு அர்க்கியம் செலுத்தி வழிபாடு நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார், ஒடிசா போக்குவரத்துத் துறை ஆணையரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அமிதாப் தாக்கூர் ஆகியோர் பங்கேற்று சூரிய பகவானுக்கு அர்க்கியம் செலுத்தினர்.
இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி ஹிமான்ஷு குமார் லால் கூறுகையில்,
சத்பூஜை மிகவும் பிரம்மாண்டமானதும் தனித்துவமானதுமான திருவிழாவாகும்.
இந்த விழாவில் மறையும் சூரியனையும், உதயமாகும் சூரியனையும் வழிபடுவது சிறப்பம்சமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிக நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது இறைவன் அளித்த ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்.
இந்த வாய்ப்புக்காக மிகவும் நன்றியுடன் இருக்கிறேன் என்றார்.
ஒடிசா அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் மிருணாளினி தர்ஸ்வால் கூறுகையில்,
ஆற்றங்கரைகளில் திரண்டுள்ள பக்தர்கள் தங்களது குடும்பத்தினரின் நலன், ஆரோக்கியம் மற்றும் அமைதிக்காக சத்தி மையாவை வேண்டி வழிபடுகின்றனர்.அவர்களின் பிரார்த்தனையில் நானும் இணைந்து கொள்கிறேன்.
இயற்கையைப் போற்றி வழிபடும் மரபு இந்து மதத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
அந்த உணர்வை வெளிப்படுத்தும் விழாவாகவே சத்த்பூஜை அமைந்துள்ளது.
இயற்கையின் ஆதாரமாகவும், உலக இயக்கத்தின் மையமாகவும் விளங்கும் சூரியனை நாம் வழிபடுகிறோம்.
ஒடிசாவில் சகோதரனுடன் சகோதரியையும் இணைத்து வழிபடும் பாரம்பரியம் உள்ளது. அதேபோல் சூரிய பகவானின் சகோதரியாகக் கருதப்படும் சத்தி மையாவையும் இந்த விழாவில் வழிபடுகிறோம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பார்வையில், பெண் குழந்தைகளை மதித்து அவர்களை வழிபாட்டுக்குரியவர்களாகப் போற்றுவது, சமூகத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது என்றார்.
சத்பூஜையின் நிறைவு நாளில் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று வழிபாடு நடத்தியது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.
Hindusthan Samachar / LOGESHWARI V