Enter your Email Address to subscribe to our newsletters

கேரளம், 16 நவம்பர் (ஹி.ச.)
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான வருடாந்திர சீசன் இன்று (திங்கட்கிழமை) மாலை தொடங்குகிறது.
இதையொட்டி கோவில் நடை மாலை 5 மணிக்குத் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி சுமார் 60 நாட்கள் நடைபெறும் இந்தப் புனித யாத்திரைக் காலத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசிப்பது வழக்கம்.
இன்று மாலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோவில் நடையைத் திறந்து தீபாராதனை நடத்துகிறார்.
தொடர்ந்து 18ஆம் படிக்குக் கீழே அமைந்துள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். இதையடுத்து சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மேல்சாந்திகள் முறைப்படி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தந்திரி முன்னிலையில் சிறப்பு சடங்குகளும் அபிஷேகங்களும் நடத்தப்படும். பின்னர் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
கார்த்திகை முதல் நாளான நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடங்கும். புதிய மேல்சாந்தி சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி நடையைத் திறந்து பூஜைகளை மேற்கொள்வார்.
தினமும் அதிகாலை 3 மணிக்குத் தொடங்கும் வழிபாடுகளில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறும். நண்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மாலை 3 மணிக்குத் திறக்கப்படும்.
மாலை தீபாராதனை, இரவு புஷ்பாபிஷேகம் மற்றும் அத்தாள பூஜை முடிந்ததும், இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
நடப்பு சீசனில் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளன. தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்புக்காக முதற்கட்டமாக 9,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், சுகாதாரத் துறை சார்பில் 100 மருத்துவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சன்னிதானத்தில் புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தினமும் அதிகபட்சமாக 80,000 பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு மூலம் 66,000 பேரும், உடனடி முன்பதிவு வாயிலாக 14,000 பேரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஆன்லைன் முன்பதிவு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வருகையைப் பொறுத்து உடனடி முன்பதிவு எண்ணிக்கையில் மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V