Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரப் பிரதேசம், 16 நவம்பர் (ஹி.ச.)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2027-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகளைத் தொடங்க உள்ளதாக அம்மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
உத்தரப் பிரதேசத்தில் வசிக்கும் 25 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் போன்றவர்கள். அவர்களின் மகிழ்ச்சி, துயரம், நம்பிக்கைகள், சாதனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வுபூர்வமான முயற்சியாகவே 'யோகி கி பதி' அமைந்துள்ளது.
கடந்த 50 வாரங்களுக்கும் மேலாக ஒவ்வொரு வாரமும் கடிதங்கள் வாயிலாக மாநில மக்களுடன் எனது எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து வருகிறேன்.
இது வெறுமனே கடிதம் எழுதும் பணியல்ல. எனது குடும்பமாகக் கருதும் மாநில மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாகும்.
இந்த உணர்வுபூர்வமான பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'யோகி கி பதி' என்ற காபி டேபிள் புத்தகம் இன்று வெளியிடப்பட உள்ளது.
இதனுடன் தொடர்புடைய கண்காட்சியும் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
மேலும், உலகின் மிகப்பெரிய மற்றும் இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டமான 'மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027'-ன் இரண்டாம் கட்டப் பணிகளையும் உத்தரப் பிரதேசத்தில் தொடங்கி வைக்க உள்ளேன்.
இதில் முதல்கட்டமாக, பொதுமக்கள் தாங்களாகவே தங்களது விவரங்களைப் பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு நவம்பர் 16 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும்.
இதைத்தொடர்ந்து, டிசம்பர் 1, 2026 முதல் ஜனவரி 4, 2027 வரை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
இந்த முக்கியமான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவது மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனின் கூட்டுப் பொறுப்பாகும்.
பொதுமக்களின் பங்கேற்பையும் அரசின் மீதான நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தி, வளர்ச்சியடைந்த உத்தரப் பிரதேசம் என்ற இலக்கை நோக்கி புதிய வேகத்துடன் பயணிப்போம் என இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V