Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 நவம்பர் (ஹி.ச.)
காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்வை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாரணாசிக்கு 7 ஜோடி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் கன்னியாகுமரி – வாரணாசி இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, நவம்பர் 25ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், மாலை 6.50 மணிக்கு மதுரையை வந்தடைகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும் இந்த ரயில், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாகச் சென்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு வாரணாசியைச் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், டிசம்பர் 1ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்படும் ரயில், மதுரைக்கு இரவு 11.35 மணிக்கு வந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு கன்னியாகுமரியைச் சென்றடைகிறது.
இதேபோல், டிசம்பர் 3ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கும், டிசம்பர் 9ஆம் தேதி வாரணாசியில் இருந்து கன்னியாகுமரிக்கும் மற்றொரு ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களும் மதுரை வழியாக இயக்கப்படுகின்றன.
மேலும், கோவை – வாரணாசி இடையே நவம்பர் 29, டிசம்பர் 5 ஆகிய தேதிகளிலும், சென்னை சென்ட்ரல் – வாரணாசி இடையே நவம்பர் 28, டிசம்பர் 2, டிசம்பர் 8 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான மறுமார்க்க ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் தலா ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நவம்பர் 17ஆம் தேதி காலை 8 மணி மற்றும் மாலை 4 மணி முதல் தொடங்குகிறது.
கன்னியாகுமரி – வாரணாசி சிறப்பு ரயில்களில் குளிர்சாதன இரண்டடுக்கு, மூன்றடுக்கு, மூன்றடுக்கு பொருளாதார வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இடம்பெறும். கோவை மற்றும் சென்னை வழித்தட சிறப்பு ரயில்களிலும் குளிர்சாதன மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam