உலக அதிசயமாக தஞ்சை பெரிய கோயில்?- பரிந்துரைக்க நாடாளுமன்றக் குழு முடிவு!
தஞ்சை, 17 நவம்பர் (ஹி.ச.) தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசயமாக அங்கீகரிக்கப் பரிந்துரைக்கப்படும் என நாடாளுமன்ற போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நிலைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான
தஞ்சை பெரிய கோயில்


தஞ்சை, 17 நவம்பர் (ஹி.ச.)

தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசயமாக அங்கீகரிக்கப் பரிந்துரைக்கப்படும் என நாடாளுமன்ற போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நிலைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் திங்கள்கிழமை தஞ்சாவூர் சென்றனர்.

அங்கு மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழனால் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெருவுடையார் கோயில் எனப்படும் பெரிய கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

கோயிலின் கட்டிடக்கலைச் சிறப்புகள், நுணுக்கமான சிற்பங்கள், பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்கள் மற்றும் பழங்காலக் கல்வெட்டுகளை நாடாளுமன்றக் குழுவினர் பார்வையிட்டனர். அப்போது பேசிய குழுத் தலைவர் சஞ்சய் குமார் ஜா, தஞ்சை பெரிய கோயில் ஒரு தேசிய அதிசயம் என்றும், தாஜ்மஹாலை விடவும் மிகப்பெரிய அதிசயம் என்றும் புகழாரம் சூட்டினார்.

மேலும், பெரிய கோயிலை உலக அதிசயமாக உயர்த்தி அங்கீகரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு நிச்சயமாகப் பரிந்துரைக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பெரிய கோயிலுக்கு வருகை தருவதாகவும், குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலைக் கையாள்வதில் சவால்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கேசரிதேவ்சிங் ஜாலா, எஸ். கல்யாணசுந்தரம், ஜக்கேஷ், கோல்லா பாபுராவ், சுதா மூர்த்தி மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பாபு சிங் குஷ்வாஹா, அனுராக் சர்மா, அரவிந்த் கண்பத் சாவந்த், கே.இ. பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாரம்பரிய மங்கள வாத்தியங்கள் முழங்க நாடாளுமன்றக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கரிகால சோழனால் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணையையும் நாடாளுமன்றக் குழுவினர் பார்வையிட்டனர். அங்கு அணையின் கட்டுமான அமைப்பு, பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் தமிழகத்தின் முக்கியப் பாரம்பரியச் சின்னங்களை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கும் சென்ற நாடாளுமன்றக் குழுவினர், கோயிலின் கட்டிடக்கலைச் சிறப்புகளை ஆய்வு செய்தனர். குறிப்பாக, விஜயநகரப் பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தையும் பார்வையிட்டனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P