Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கக் கோரி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவாலை தமிழக அரசு தரப்பில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவாலைச் சந்தித்து இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதில், சென்னை துறைமுகத்தை மேம்படுத்துதல், சென்னை மெரினா, மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரியில் கடல் நடைபாதைகள் மற்றும் படகுத் துறைகள் அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கு நிதியுதவி கோரப்பட்டுள்ளது.
மேலும், சென்னை - புதுச்சேரி இடையே பயணிகள் படகு போக்குவரத்தைத் தொடங்கவும், ராமேஸ்வரம் - இலங்கையின் தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களைச் செயல்படுத்தவும் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.
இதுதவிர, ராமேஸ்வரம் துறைமுகத்தை மேம்படுத்துதல், கடலூரில் பசுமை வள ஆழ்கடல் துறைமுகம் அமைத்தல், பக்கிங்காம் கால்வாயைப் புனரமைத்து ஆழப்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கும் நிதி கோரப்பட்டுள்ளது.
அதேபோல், மேற்கு மற்றும் கிழக்குக் கடல் பகுதிகளை இணைக்கும் வகையில் பாம்பன் கால்வாயை 10 மீட்டர் ஆழப்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடல்சார் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் துறைமுகக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை
விடுத்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P