Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 நவம்பர் (ஹி.ச.)
தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தும், தலைவர் விஜய் மீதான நம்பிக்கையிலும்தான் வாக்களித்துள்ளனர் என்றும், எனவே கட்சியில் பதவிகளையோ, தனிப்பட்ட ஆதாயங்களையோ எதிர்பார்க்காமல் அனைவரும் கட்சிப் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கட்சிக்காக உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் உழைக்கும் நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும், அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில்கூட தலைவர் விஜய் உரிய வாய்ப்புகளை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், கட்சி நிர்வாகிகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ, கட்சியின் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதோ, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதோ கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படும் நிர்வாகிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் அவர்கள் வகிக்கும் கட்சிப் பதவிகள் பறிக்கப்படும் என்றும் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தவெக தலைமை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam