சென்னை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை- வாசுகி முன்வைத்த அதிரடி குற்றச்சாட்டுகள்!
சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய ரூ.29 ஆயிரம் கோடி நிதியை இதுவரை தமிழக அரசு விடுவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னையில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ச
Vasuki


சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய ரூ.29 ஆயிரம் கோடி நிதியை இதுவரை தமிழக அரசு விடுவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னையில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து போராட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் குழு உறுப்பினர் வாசுகி,

உள்ளாட்சி அமைப்புகளுக்காக நடப்பாண்டு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.29 ஆயிரம் கோடி நிதியை அரசு இதுவரை விடுவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

இதனால் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகப் பணிகள் மட்டுமின்றி, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து வடசென்னையில் நிலவும் குப்பை மேலாண்மை பிரச்சினை குறித்துப் பேசிய அவர், அப்பகுதியில் தினமும் சுமார் 50 டன் குப்பைகள் எரியூட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், சுற்றுவட்டார மக்களும் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளைச் சந்திப்பதாகக் கூறினார்.

இந்தப் பாதிப்புகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, குப்பைகளை எரியூட்டுவதற்குப் பதிலாக அறிவியல் அடிப்படையிலான திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும், கழிவுகளை மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் கையாள புதிய திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய நிர்வாகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வாசுகி கேட்டுக்கொண்டார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை உடனடியாக விடுவிப்பது, வடசென்னையில் குப்பை மேலாண்மைக்கு மாற்றுத் திட்டம் செயல்படுத்துவது, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

Hindusthan Samachar / LOGESHWARI V