Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 நவம்பர் (ஹி.ச.)
டெல்லியில் அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள 'ஷீஷ் மஹால்' இல்லம் விரைவில் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளதாக டெல்லி அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
இதற்கான டிக்கெட் முன்பதிவு, பார்வையிடுவதற்கான நடைமுறைகள் மற்றும் நேர ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பர்வேஷ் வர்மா,
பல ஆண்டுகளாக டெல்லி மக்கள் இந்த ஷீஷ் மஹால் இல்லத்தைப் பார்வையிட விருப்பம் தெரிவித்து வந்ததாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த இல்லத்தை மாநில விருந்தினர் மாளிகையாக மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், பொதுமக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தற்போது இந்த வளாகத்தை அனைவரும் பார்வையிடும் வகையில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், பொதுமக்கள் எவ்வாறு அனுமதி பெறுவது, டிக்கெட் முன்பதிவு செய்வது, பார்வையிடுவதற்கான நேரத்தைத் தேர்வு செய்வது உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த வளாகத்தின் முழுமையான தோற்றத்தையும் அதன் உள்கட்டமைப்பு வசதிகளையும் முதலில் நாட்டின் ஊடகங்களுக்கு காண்பிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அரசு வாகனத்தையும் அரசு பங்களாவையும் பயன்படுத்த மாட்டேன் என்று முன்பு கூறிய ஒருவர், பின்னர் ஏற்கெனவே இருந்த பல பங்களாக்கள், பணியாளர் குடியிருப்புகள் மற்றும் கார் நிறுத்துமிடங்களை இடித்துவிட்டு இந்த ஷீஷ் மஹாலை உருவாக்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த இல்லத்தின் ஒவ்வொரு அறையிலும் நவீன ஸ்மார்ட் விளக்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் மதிப்பிலான திரைச்சீலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பளிங்குக் கற்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் இந்த வளாகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் அனைவரும் இந்த வளாகத்தை நேரில் சுற்றிப் பார்த்து அதன் வசதிகளையும் கட்டுமான அமைப்பையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.
இறுதியாக, இந்த ஷீஷ் மஹால் டெல்லியில் ஊழலுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குவதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர் பர்வேஷ் வர்மா, பொதுமக்கள் நேரில் பார்த்து உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V