சுற்றுலா, வேலைவாய்ப்பு, மின் உற்பத்தி - காந்தி சாகருக்கு முக்கியத்துவம் அளிக்கும் மோகன் யாதவ்!
போபால், 17 நவம்பர் (ஹி.ச.) மத்தியப் பிரதேச மாநிலம் காந்தி சாகரில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதன் முக்கியத்துவம் மற்றும் அப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் விளக்கம் அளித்து
Mohan yadhav


போபால், 17 நவம்பர் (ஹி.ச.)

மத்தியப் பிரதேச மாநிலம் காந்தி சாகரில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதன் முக்கியத்துவம் மற்றும் அப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தக் கூட்டம் வழக்கமான அமைச்சரவைக் கூட்டங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்றும், மின் உற்பத்தி, சுற்றுலா வளர்ச்சி மற்றும் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மோகன் யாதவ்,

காந்தி சாகர் பகுதியில் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் பம்ப்டு ஸ்டோரேஜ் (Pumped Storage) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் மூலம் தண்ணீரை மறுசுழற்சி செய்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். குறிப்பாக, மின்சாரத் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் விரைவாக மின்சாரத்தை உற்பத்தி செய்து விநியோகிக்க முடியும்.

இதனால் மாநிலங்களுக்கு பொருளாதார ரீதியாகப் பலன் கிடைப்பதுடன், குறைந்த செலவில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தையும் உறுதி செய்ய முடியும் என்றார்.

மேலும், இந்த மின் உற்பத்தித் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.12,987 கோடி என்றும், திட்டம் முழுமையாகச் செயல்படும்போது உச்சபட்சத் தேவைக் காலங்களில் சுமார் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தி மேல்நிலை நீர்த்தேக்கத்தில் தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும். பின்னர் இரவு நேரங்கள் மற்றும் மின்சாரத் தேவை அதிகரிக்கும் நேரங்களில் அந்த நீரைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம் என்றும் அவர் விளக்கினார்.

காந்தி சாகர் பகுதி மின் உற்பத்தித் திட்டத்துடன் மட்டுமின்றி சுற்றுலாத் துறையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சிறுத்தைகள் திட்டம் காரணமாக அந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய மையமாக உருவெடுத்து வருவதாகக் கூறினார்.

மேலும், பல லட்சம் ஆண்டுகள் பழமையான பாறை அமைப்புகள், பாறைகளில் காணப்படும் ஓவியங்கள் மற்றும் வரலாற்றுச் சுவடுகள் இப்பகுதியில் உள்ளதாகவும், தொடக்ககால மனிதர்களின் வாழ்வியலை அறிந்துகொள்ள உதவும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக காந்தி சாகர் விளங்குவதாகவும் தெரிவித்தார்.

இப்பகுதியின் ஆன்மிகச் சிறப்பு, சுற்றுலா வாய்ப்புகள் மற்றும் பரந்த நீர்த்தேக்கம் ஆகியவை உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, மீன் உற்பத்தி மற்றும் மீன்பிடித் தொழில் மூலம் அப்பகுதி மீனவர்களுக்கும் பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

மத்தியப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'கேபினட் டெஸ்டினேஷன்' என்ற புதிய முயற்சியின் ஒரு பகுதியாகவே காந்தி சாகரில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுவதாக மோகன் யாதவ் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின்படி, குறிப்பிட்ட பகுதிகளில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தி, அந்தப் பகுதியின் பிரச்சினைகள், வளர்ச்சித் தேவைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அமைச்சர்களும் அதிகாரிகளும் நேரடியாக அறிந்துகொள்ள முடியும்.

இதன் மூலம் கள நிலவரத்தை நேரில் பார்வையிட்டு, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும், இந்தத் திட்டம் உள்ளூர் மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V