Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர், 17 நவம்பர் (ஹி.ச.)
பஞ்சாப் மாநில விவசாயிகளின் நலன் மற்றும் வேளாண் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.254 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், விவசாயிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
விவசாயிகளின் நலனுக்காகவே பஞ்சாப் மாநிலத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பதிண்டா மாவட்டத்தில் உள்ள பதர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்கங்கள் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
குறிப்பாக, யூரியாவுக்கு மாற்றாகப் பயிர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய பசுமை அமோனியா (Green Ammonia) குறித்த செயல்விளக்கம் இதில் இடம்பெறுகிறது.
சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி பசுமை அமோனியாவை உற்பத்தி செய்ய முடியும் என்றும், இதனை விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில வேளாண்துறை அமைச்சர் குர்தீப் சிங் குதியானும் பங்கேற்கிறார். மேலும், மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.254 கோடி நிதிக்கான ஒப்புதல் கடிதங்களை விவசாயிகளிடம் வழங்க உள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
பஞ்சாப் விவசாயிகளுடன் 'கேத் பச்சாவோ' (Khet Bachao) இயக்கம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதில் பயிர் பல்வகைப்படுத்துதல், அறுவடைக்குப் பிறகு வயல்களில் எஞ்சும் பயிர்க்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்தல் மற்றும் ஒருங்கிணைந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
தொடர்ந்து, லூதியானா மாவட்டத்தில் உள்ள கிருஷி விக்யான் கேந்திராவிற்குச் சென்று விவசாயிகளைச் சந்திக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அபோஹர் மற்றும் ஃபாசில்கா பகுதிகளுக்கும் செல்ல உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, கின்னோ பழத்தோட்டங்கள் மற்றும் இதர பயிர்கள் நீர்மட்ட உயர்வால் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நவம்பர் 24-ஆம் தேதி சீக்கிய மதத்தின் முதல் குருவான குருநானக் தேவ் ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்த உள்ளதாகவும், அன்றைய தினம் விவசாயிகளுடனான சந்திப்பு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளதாகவும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V