Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 17 நவம்பர் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நூலகங்களின் செயல்பாடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் வாசகர்களுக்குத் தேவையான வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இக்குழுவினர் வருகை தந்தனர்.
இதன் ஒரு பகுதியாக, மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வைத் தொடங்கிய குழுவினர், அங்குள்ள புத்தகங்கள், வாசிப்பு வசதிகள் மற்றும் நூலகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டனர்.
அப்போது நூலகத்திற்கு வரும் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் தங்களுக்குத் தேவையான வசதிகள் குறித்து குழுவினரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குறிப்பாக, மாவட்ட மைய நூலகத்தில் கழிப்பறை வசதிகள் மற்றும் கட்டிட வசதிகள் போதுமானதாக இல்லை எனத் தெரிவித்தனர்.
பெண் வாசகர்கள் அதிக அளவில் நூலகத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்குப் போதுமான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், பெண்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு நாப்கின் வசதியும் செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் நூலகத்தில் குறைவாக இருப்பதாகவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குழுத் தலைவர் ஜோதிமணி, திருவாரூர் மாவட்ட மைய நூலகம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் பொது அறிவு நூல்கள் நூலகத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான புத்தகங்கள் போதுமான அளவில் இல்லை என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, தேவையான நூல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
தமிழக நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் தொடர்பான சர்ச்சையின் அடிப்படையில்தான் இந்த ஆய்வு நடைபெறுகிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஜோதிமணி, அந்த விவகாரத்திற்கும் தற்போதைய ஆய்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.
மேலும், தமிழகத்தில் உள்ள நூலகங்களின் தற்போதைய நிலையை அறிந்து, அவற்றின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் என்றும் விளக்கமளித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V