Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 17 நவம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 85 வயதான வேணுகோபால். இவருக்குச் சொந்தமாக அதே பகுதியில் 2 ஏக்கர் 7 சென்ட் விவசாய நிலம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது உறவினரான பத்மநாத மந்தடியின் வழி கொள்ளுப் பேரன் நந்தகுமார், தனது ஆதார் அட்டையில் பிழை இருப்பதாகவும் அதைத் திருத்த வேண்டும் என்றும் கூறி வேணுகோபாலை திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
அங்கு ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த சொத்து தொடர்பான பத்திரத்தில் அவரிடம் கையெழுத்துப் பெற்றதாகவும், அதன் மூலம் முதியவருக்குச் சொந்தமான நிலத்தை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டதாகவும் வேணுகோபால் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து வேறு யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து புதைத்துவிடுவேன் என மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, உறவினர்கள் வேணுகோபாலை அழைத்துச் சென்று திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது, அந்த நிலத்தைத் தான் விற்பனை செய்ததாகப் பதிவுகள் இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், நிலத்திற்கான விற்பனைத் தொகையாக ரூ.19.71 லட்சம் வழங்கப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டிருந்ததாகவும், அந்தப் பணம் முதியவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தனக்கென வங்கிக் கணக்கே இல்லாத நிலையில், பணம் வரவு வைக்கப்பட்டதாகக் காட்டப்பட்ட காசோலை போலியானது என அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சொத்து விவகாரம் கிராம மக்களுக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, தனது மற்றொரு சகோதரரின் மகன் சூர்யா தன்னை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அவர் காணாமல் போனதாக மற்றொரு சகோதரரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் தான் மீட்கப்பட்டதாகவும் முதியவர் கூறியுள்ளார்.
தன்னை ஏமாற்றி நிலத்தைப் பத்திரப்பதிவு செய்துகொண்டதாகக் கூறப்படும் நந்தகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேணுகோபால் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மோசடி மூலம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சொத்துப் பத்திரத்தை ரத்து செய்து, தனது 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தையும் மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
85 வயது முதியவரின் இந்தப் புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V