Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் அரசு நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலிப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
அரசு நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
உலகிலேயே புத்தகக் கொள்முதலில் இதுபோன்ற ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் தான் நிகழ்ந்துள்ளதாகவும், தந்தை பெரியார் பெயருடன் தொடர்புபடுத்தி இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருப்பது வருத்தமளிப்பதாகவும் விமர்சித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு நூலகங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட புத்தகக் கொள்முதல் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, 'அகல் விளக்கு' என்ற பதிப்பகத்திடமிருந்து அதிக அளவில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும், சர்ச்சைக்குரிய எழுத்தாளர்களின் பெயர்களில் உருவாக்கப்பட்ட நூல்களும் கொள்முதல் பட்டியலில் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அந்தப் பதிப்பகத்திடமிருந்து சுமார் 1.7 கோடி புத்தகங்கள் வாங்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தக் கொள்முதல் நடவடிக்கைகளில் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் ஏழு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, சர்ச்சைக்குரிய பதிப்பகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை கன்னிமாரா பொது நூலகத்தில் மட்டும் சுமார் 550 செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
இந்தப் புத்தகங்கள் நூலகத்திற்குள் எவ்வாறு வந்தன, அவற்றைக் கொள்முதல் செய்தவர்கள் யார், அவற்றின் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், பெரிய நூலகங்களைச் சார்ந்த சிறிய நூலகங்களிலும் குறிப்பிட்ட பதிப்பகத்தின் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவ்வளவு பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க அரசியல் பின்னணி அல்லது சிலரது ஆதரவு இருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையும் துறை ரீதியான விசாரணையும் தனித்தனியாக நடைபெற்று வருவதாகக் கூறினார். தமிழ் நூல்களை ஆய்வு செய்தபோதே ஏராளமான சர்ச்சைக்குரிய புத்தகங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இனி ஆங்கிலப் புத்தகங்களின் கொள்முதல் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.
எதிர்காலத்தில் அரசு நூலகங்களுக்கான புத்தகங்களை வாங்குவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சர்ச்சைக்குரிய புத்தகங்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் வகையில் பெரிய அளவிலான கண்காட்சி ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த முறைகேட்டில் யாருக்குத் தொடர்பு இருந்தாலும், அவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V