Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)
கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் முக்கிய அரசு நூலகங்களான கோவை பெரியார் அறிவுலகம் மற்றும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட இடங்களுக்குப் புத்தகங்கள் வாங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.
குறிப்பாக, நூலகங்களுக்காக வாங்கப்பட்ட புத்தகங்களில் தரம் குறைந்தவை, போலியானவை மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தகங்களும் இடம்பெற்றிருந்ததாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்தப் புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
பெரியார் அறிவுலகத்தில் அதிரடி சோதனை!
புத்தகங்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின்போது புத்தகக் கொள்முதல் தொடர்பான ஆவணங்கள், கொள்முதல் உத்தரவுகள் மற்றும் நிதி சார்ந்த பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றை ஆய்வு செய்து கொள்முதல் நடைமுறைகளில் விதிமீறல்கள் இருந்தனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட பதிப்பகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதா, புத்தகங்களின் தரம் மற்றும் விலை நிர்ணயத்தில் முறைகேடுகள் நடைபெற்றனவா என்பதையும் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
4 பேருக்கு சம்மன்; 2 பேர் பணியிடை நீக்கம்!
இதற்கிடையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பணியாற்றும் நூலகக் காப்பாளர், நூலகச் செயலாளர் உள்ளிட்ட நான்கு பேருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட நடைமுறைகள் மற்றும் அதில் அவர்களின் பங்களிப்பு குறித்து நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதுதவிர, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பணியாற்றிய இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை தீவிரமடைந்துள்ளதால், இந்த விவகாரம் கல்வி மற்றும் நூலகத் துறையினர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V