டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் - விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
தமிழ்நாடு, 18 நவம்பர் (ஹி.ச.) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.700 நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம
விவசாயிகள்


தமிழ்நாடு, 18 நவம்பர் (ஹி.ச.)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.700 நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தருமபுரியில் நடைபெற்ற சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் நா.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மூத்த தலைவர் இரா.முத்தரசன், பொதுச் செயலாளர் அ.பாஸ்கர், துணைத் தலைவர் க.மாரிமுத்து எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 27 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு, ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தில் மாநில அரசுகள் 40 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்விழிப்படலம் பதிவு மூலம் வருகைப் பதிவு செய்வதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்படுவதாகவும் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

எனவே, புதிய திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதுடன், ஆண்டுக்கு 100 நாட்களாக உள்ள வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி, தினக்கூலியாக ரூ.700 வழங்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என கர்நாடக முதலமைச்சரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புகளுக்கு எதிராக மேக்கேதாட்டு அணை திட்டம் இருப்பதாகவும், தமிழகத்தின் தண்ணீர் உரிமையை மதித்து இரு மாநில மக்களிடையே நல்லுறவை வலுப்படுத்த வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஊரக வேலைத் திட்டத்தில் கண்விழிப்படலம் பதிவு முறைக்குப் பதிலாக நேரடி வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்த வேண்டும் என்றும், இணையதள வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல், ஏழை மக்களுக்கான இலவச வீட்டுமனை நிலத்தின் அளவை உயர்த்துவதுடன், இலவச வீட்டுமனைப் பட்டா பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam