84 சென்ட் மயான நிலத்தை மீட்டுத் தரக்கோரி போராட்டம்-கிணத்துக்கடவில் பொதுமக்கள் ஆவேசம்!
கோவை, 18 நவம்பர் (ஹி.ச.) கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சுலபம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலாம் பாளையம், அண்ணா நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்க
Protest


கோவை, 18 நவம்பர் (ஹி.ச.)

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சுலபம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலாம் பாளையம், அண்ணா நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில்

2,000-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் இறுதிச்சடங்குகளுக்காக 84 சென்ட் நிலம் மயானமாக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தையே அப்பகுதி மக்கள் மயானமாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மயானத்திற்குச் சொந்தமான இடத்தின் சில பகுதிகளை தனிநபர்கள் ஆக்கிரமித்து வணிகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மயான நிலத்தை மீட்டுத் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்து, மயானப் பயன்பாட்டிற்கு 10 சென்ட் மட்டுமே ஒதுக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், தங்களுக்குச் சொந்தமான 84 சென்ட் நிலத்தையும் முழுமையாக மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பட்டியலின மக்களின் மயான நிலத்தை மீட்பதில் தாமதம் ஏற்படுத்துவதாகக் கூறி மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற நாகராஜ் கூறுகையில், 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறைகளாக இந்த மயானத்தைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

தற்போது அதிகாரிகள் நில அளவீடு செய்து 10 சென்ட் மட்டுமே வழங்க முயற்சிப்பதாகவும், மயானத்திற்கான சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 84 சென்ட் நிலத்தையும் முறையாக ஒதுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், தங்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் நில அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

எனவே, தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் மீட்டு, ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட 84 சென்ட் மயான இடத்தையும் முழுமையாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V