Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு காஷ்மீர், 18 நவம்பர் (ஹி.ச.)
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
மசூதி ஒன்றுக்குள் பதுங்கியுள்ள லத்தீப் என்ற உள்ளூர் பயங்கரவாதியைச் சரணடைய வைக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SSP) அனயத் அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாகக் கூறினார்.
பல்வேறு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து திட்டமிட்ட முறையில் செயல்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மோதலில் சிக்கியுள்ள லத்தீப்பைச் சரணடைய வைக்க நீண்ட நேரமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
தாமும் அவருடன் வீடியோ அழைப்பு மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் பேசியதாகத் தெரிவித்தார்.
இளம் வயதுடைய அவர், எதிர்கால வாழ்க்கையைத் தொடர வாய்ப்பு இருப்பதால் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
இருப்பினும், சரணடைய மறுத்த லத்தீப், அதிகாலை சுமார் 2.45 மணியளவில் மசூதிக்குள் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எஸ்எஸ்பி தெரிவித்தார்.
தற்போது பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை முழுமையாகச் சுற்றிவளைத்துள்ளனர்.
மசூதிக்கு எந்தவித சேதமும் ஏற்படாத வகையில், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) பின்பற்றி மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் விளக்கினார்.
மேலும், அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படத் தயாராக இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர் தானாக முன்வந்து சரணடைவதற்கான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, லத்தீப் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி, அதாவது 2025ஆம் ஆண்டு இதே நாளில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பில் இணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியதாக அனயத் அலி கூறினார்.
அவர் தீவிரமான சுய தீவிரவாதச் சிந்தனைக்கு ஆளாகியிருந்ததாகவும், எல்லைக்கு அப்பால் இருந்து கிடைத்த உத்தரவுகளின்படி அமைதி, சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் மூன்று முதல் நான்கு கொடூரமான தாக்குதல்களை நடத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த நடவடிக்கை 2026ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக அமையும் என நம்பிக்கை தெரிவித்த அவர், மசூதிக்கு குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / LOGESHWARI V