Enter your Email Address to subscribe to our newsletters

மத்தியப் பிரதேசம், 18 நவம்பர் (ஹி.ச.)
காந்திசாகரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்தின் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் புதிய பம்ப்டு ஹைட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
சுதந்திரத்திற்குப் பிறகு குறுகிய காலத்திலேயே காந்திசாகர் அணை கட்டப்பட்டது. இங்குள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கம், மின் உற்பத்தித் திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது.
இருப்பினும், அந்தத் திட்டம் முழுமையான வெற்றியை அடைய நீண்ட காலம் ஆனது.
தற்போது எங்களது அரசு புதிய அணுகுமுறையாக 'பம்ப்டு ஹைட்ரோ திட்டத்தை' அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் தற்போதுள்ள மின் உற்பத்தியை விட ஏறக்குறைய 20 மடங்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
மேலும், நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்படும் தண்ணீரில் ஒரு சொட்டுகூட வீணாகாமல் பயன்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இரண்டு நீர்த்தேக்கங்களைப் பயன்படுத்தி, ஒரே நீரை மீண்டும் மீண்டும் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இதில் இடம்பெறுகிறது.
இதன் மூலம் மத்தியப் பிரதேச மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு கிடைக்கும்.
இத்தகைய திட்டங்கள் குறித்து நாட்டின் பிற மாநிலங்களும் அறிந்துகொண்டு, அவற்றைச் செயல்படுத்த ஆர்வம் காட்டும் வகையில் இந்த முயற்சி அமையும் என நம்புகிறேன். மற்ற மாநிலங்களும் பின்பற்றக்கூடிய சிறந்த முன்னுதாரணமாக இது திகழும்.
மேலும், மாநிலத்தின் தொலைதூரப் பகுதியான காந்திசாகரில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதன் மூலம், இந்தப் பகுதியின் தனிச்சிறப்புகளையும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளோம்.
துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் இங்கு வந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாநிலத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக இந்தப் பகுதி மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என நம்புகிறேன். எங்களது அரசு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில், இந்த 'டெஸ்டினேஷன் கேபினட்' முயற்சி ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
ஏற்கெனவே நடத்தப்பட்ட பிராந்திய தொழில் முதலீட்டாளர் மாநாட்டைப் போலவே, இந்த முயற்சியும் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
மாநிலத்தின் பரந்த புவியியல் வளங்களைப் பயன்படுத்தி, பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், மக்களிடையே புதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V