Enter your Email Address to subscribe to our newsletters

மகாராஷ்டிரா, 18 நவம்பர் (ஹி.ச.)
இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோந்தே பாட்டீல் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதுடன், கல்வித் துறையும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கல்வி முறையில் தேவையான மாற்றங்கள் ஏற்படவில்லை என்றும், இதனால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சிக் காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) உற்பத்தித் துறையின் பங்களிப்பு 17 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது அது சுமார் 12 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இந்தியச் சந்தையிலிருந்து தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதார நிலை குறித்துக் கவலை தெரிவித்தார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பிய அதுல் லோந்தே பாட்டீல், ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 0.75 சதவீதம் வரை உயர்த்தப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம் என்ற தகவல்களையும் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், வங்கிக் கடன்களுக்கான வட்டி அதிகரிப்பதுடன், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களைப் பெற்றுள்ள பொதுமக்களின் மாதத் தவணைத் தொகையும் அதிகரிக்கும். இதனால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் கூடுதல் நிதிச்சுமையைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் வேலையின்மை, கல்வி, உற்பத்தித் துறை வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார அம்சங்களை முன்வைத்து மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V