Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 18 நவம்பர் (ஹி.ச.)
ராணிப்பேட்டை நகராட்சிப் பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் ரூ.13.55 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இதனைத் தமிழக முதலமைச்சர் விஜய் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் காலை 10 மணிக்கு விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம். சுகுமார், நகர்மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் சீமா ரமேஷ் கர்ணா உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
ஆனால், அறிவிக்கப்பட்ட நேரமான காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அங்கு வந்திருந்த மக்கள் பிரதிநிதிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
காலை 11.30 மணி ஆகியும் விழா தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் நகர்மன்றத் தலைவர் சுஜாதா வினோத் அதிருப்தியடைந்ததாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் விசிகவைச் சேர்ந்த சீமா ரமேஷ் கர்ணா மற்றும் திமுகவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் விழாவைப் புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினர்.
அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்தபோதே அவர்கள் வெளியேறியது அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 11.30 மணி வரையிலும் விழா தொடங்கவில்லை. மேலும், நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் அதன் நேரம் தொடர்பாகத் தங்களுக்கு முறையான தகவல்களும் வழங்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V