Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 18 நவம்பர் (ஹி.ச.)
சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடியவர் வ.உ.சிதம்பரனார். கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் எனப் போற்றப்படும் அவரது 90-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, திருநெல்வேலியில் அமைந்துள்ள வ.உ.சி மணிமண்டபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தச்சை கணேசராஜா, நாட்டின் விடுதலைக்காகத் தனது சொத்து, உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்த மாபெரும் தேசபக்தர் வ.உ.சிதம்பரனார் என்று புகழாரம் சூட்டினார்.
அவரது தியாகங்களையும், சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை எதிர்காலச் சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலியில் வ.உ.சி மணிமண்டபம் அமைக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.
அதேநேரத்தில், தற்போது மணிமண்டபத்தில் போதிய பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லை என அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் மணிமண்டப வளாகத்திற்குள் வந்து மது அருந்துவதுடன், மதுபாட்டில்களை உடைத்துச் செல்வதாகவும் வேதனை தெரிவித்தனர்.
தேசத்திற்காகத் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த தலைவரின் நினைவிடத்தைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பராமரிப்பது அனைவரின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட தச்சை கணேசராஜா, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு மணிமண்டபத்தைச் சீரமைக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / LOGESHWARI V