Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 19 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தெலுங்கானா ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வருவதாக அமலாக்கத்துறை (ஈ.டி.) தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கக்கோரி அமலாக்கத்துறை மற்றும் முன்னாள் எம்.பி. ஹரிராம ஜோகையா ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, ஜெகன் தொடர்பான வழக்குகளில் சி.பி.ஐ. இதுவரை 11 குற்றப்பத்திரிகைகளையும், அமலாக்கத்துறை 9 குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சி.பி.ஐ. கோர்ட்டில் 150-க்கும் மேற்பட்ட விடுவிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்குகளின் விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, இந்த வழக்குகளை தினசரி அடிப்படையில் விசாரித்து விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும் என்று ஹரிராம ஜோகையா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தெலுங்கானா ஐகோர்ட்டு, ஜெகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளின் தற்போதைய நிலை, விசாரணையின் முன்னேற்றம் மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரங்களுடன் விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA