ஆந்திராவில் 3 பொருளாதார மண்டலங்கள் உருவாக்கம் -ரூ.4.65 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க சந்திரபாபு நாயுடு திட்டம்
அமராவதி, 19 நவம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், விசாகப்பட்டினம், திருப்பதி, அமராவதி ஆகிய 3 பகுதிகளை பொருளாதார மண்டலங்களாக உருவாக்க முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.
A


அமராவதி, 19 நவம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், விசாகப்பட்டினம், திருப்பதி, அமராவதி ஆகிய 3 பகுதிகளை பொருளாதார மண்டலங்களாக உருவாக்க முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் தொழில் முதலீடுகளை ஈர்த்து, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு உயர் மட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது 3 பொருளாதார மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ள உள்கட்டமைப்பு பணிகள், தொழில் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து அதிகாரிகள் விரிவான விளக்கம் அளித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வளங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ப வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தினார்.

விசாகப்பட்டினம் பொருளாதார மண்டலத்தில் துறைமுகங்கள், தகவல் தொழில்நுட்பம், டேட்டா சென்டர்கள் மற்றும் கனரக தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இப்பகுதியில் மொத்தம் 167 திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 64 திட்டங்களுக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

'வைசாக் பே சிட்டி' முக்கிய திட்டமாக உருவாக்கப்பட உள்ளது. மதுரவாடா, கபுலுப்பாடா, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டேட்டா சென்டர் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், 15 முதல் 20 புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை விசாகப்பட்டினத்திற்கு கொண்டு வந்து, அந்த துறையில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர காக்கிநாடா தொழில் நகரம், துறைமுக விரிவாக்கம், அரக்கு மற்றும் மரேடுமில்லி பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

திருப்பதி பொருளாதார மண்டலத்தில் குறைக்கடத்தி, மின்னணு பொருட்கள், வாகன உற்பத்தி மற்றும் பசுமை எரிசக்தி தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. மாநிலத்தில் திட்டமிடப்பட்டுள்ள 87 பசுமை எரிசக்தி திட்டங்களில் 66 திட்டங்கள் இந்த மண்டலத்தில் அமைய உள்ளன. மேலும், விண்வெளி, விமானம், ராணுவ தளவாடங்கள், மின்சார வாகன உற்பத்தி ஆகிய துறைகளிலும் முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. பால், கோழிப்பண்ணை மற்றும் எண்ணெய் பனை பதப்படுத்தும் தொழில் மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த மண்டலத்தில் உள்ள 14 நகரங்களை பல்வேறு தொழில்களுக்கான மையங்களாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமராவதி பொருளாதார மண்டலத்தில் குவாண்டம் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சரக்கு போக்குவரத்து மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இப்பகுதியில் 48 முக்கிய திட்டங்கள் மூலம் ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், மச்சிலிப்பட்டினம், ராமாயபட்டினம் துறைமுகப் பணிகளை விரைவுபடுத்தி ஏற்றுமதியை அதிகரிக்கவும், சூர்யலங்கா, ஓடரேவு, ராமாபுரம், நிஜாம்பட்டினம், டிண்டி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளை சுற்றுலா மையங்களாக மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 3 பொருளாதார மண்டலங்களின் வளர்ச்சியின் மூலம் ஆந்திர மாநிலத்தில் தொழில் துறையை விரிவுபடுத்தி, பெருமளவில் முதலீடுகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க சந்திரபாபு நாயுடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA