பாம்பன் பழைய தூக்குப்பாலத்தை அகற்றும் பணி இறுதிக்கட்டம்
ராமேசுவரம், 19 நவம்பர் (ஹி.ச.) பாம்பன் கடலில் அமைந்துள்ள 110 ஆண்டுகள் பழமையான பழைய ரெயில் பாலத்தின் தூக்குப்பாலத்தை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் மீதமுள்ள தூக்குப்பாலத்தையும் அகற்றிவிட முடியும் என்று ரெயில்
A


ராமேசுவரம், 19 நவம்பர் (ஹி.ச.)

பாம்பன் கடலில் அமைந்துள்ள 110 ஆண்டுகள் பழமையான பழைய ரெயில் பாலத்தின் தூக்குப்பாலத்தை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இன்னும் ஒரு மாதத்திற்குள் மீதமுள்ள தூக்குப்பாலத்தையும் அகற்றிவிட முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாம்பன் கடலில் 110 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பழைய ரெயில் பாலம் மிகவும் பழமையானதால், அதன் அருகே சுமார் ரூ.450 கோடி செலவில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, பழைய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூக்குப்பாலத்தை அகற்றும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் பணியில், தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

மீதமுள்ள மற்றொரு பகுதியை அகற்றும் பணி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக பழைய ரெயில் பாலத்தில் ராட்சத கிரேன் நிறுத்தப்பட்டு, அதன் உதவியுடன் தொழிலாளர்கள் தூக்குப்பாலத்தின் இரும்புக் கம்பிகள் மீது அமர்ந்து வெல்டிங் செய்து இரும்புத் தகடுகளை ஒவ்வொன்றாக அகற்றி வருகின்றனர். தற்போது இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இன்னும் ஒரு மாதத்திற்குள் தூக்குப்பாலத்தை முழுமையாக அகற்றிவிட முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பழைய ரெயில் பாலத்தில் உள்ள தண்டவாளங்கள் மற்றும் இரும்பு கர்டர்களை அகற்றுவதற்கான டெண்டர் விடப்பட்டு, தனியார் நிறுவனம் மூலம் அவற்றை அகற்றும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

பழமையான பாம்பன் ரெயில் பாலத்தை முழுமையாக அகற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA