ஹரிஷ் ராவ் மீதான ஊழல் புகாரில் நடவடிக்கை எப்போது?- ரேவந்த் ரெட்டிக்கு கவிதா கேள்வி
சித்திப்பேட்டை, 19 நவம்பர் (ஹி.ச.) தெலுங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி சித்திப்பேட்டைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், முன்னாள் அமைச்சரும், சித்திப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஹரிஷ் ராவுக்கு எதிராக தெலுங்கானா ரக்ஷண சேனா தலைவர் கல்குந்த
A


சித்திப்பேட்டை, 19 நவம்பர் (ஹி.ச.)

தெலுங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி சித்திப்பேட்டைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், முன்னாள் அமைச்சரும், சித்திப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஹரிஷ் ராவுக்கு எதிராக தெலுங்கானா ரக்ஷண சேனா தலைவர் கல்குந்த்லா கவிதா ஊழல் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஹரிஷ் ராவ் பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ள கவிதா, இதுதொடர்பாக முதல்-அமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பிய புகார் கடிதங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஊழல் தொடர்பான ஆதாரங்கள் இருக்கும்போது, ஹரிஷ் ராவ் மீது நடவடிக்கை எடுப்பது எப்போது? என்று முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 14-ந்தேதி முதல்-அமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட இந்த புகார் கடிதங்கள், நவம்பர் 18-ந்தேதி அதிகாரிகளால் பெறப்பட்டதாக கவிதா குறிப்பிட்டுள்ளார்.

சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொண்டபோச்சம்மா சாகர் நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகள், வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் பம்ப் ஹவுஸ் அமைக்கும் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக, மல்லண்ணா சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து கொண்டபோச்சம்மா சாகர் நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாயின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டதிலும், பம்ப் ஹவுஸ் கட்டுமானப் பணிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார்.

முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி சித்திப்பேட்டைக்கு வந்திருந்த நேரத்தில் கவிதா இந்த புகார்களை வெளியிட்டிருப்பது தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA