Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
தமிழக சட்டமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல் தலைவருமான வி.எஸ்.பாபு மறைவெய்திய செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமும் அதிர்ச்சியும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட்டு, மக்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணி வந்தவர் வி.எஸ்.பாபு என்றும், குறிப்பாக வடசென்னை மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை அரசியல் தளத்திலும், சட்டமன்றத்திலும் எடுத்துரைத்த அவரது பொதுவாழ்வுப் பங்களிப்புகள் நினைவுகூரத்தக்கவை என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியலில் நீண்ட அனுபவமும், மக்கள் பணியில் ஈடுபாடும் கொண்ட அவரது மறைவு தமிழக அரசியல் பொதுவாழ்விற்கும், அவருடன் இணைந்து பணியாற்றிய அரசியல் தோழர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வி.எஸ்.பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வர இறைவன் மனவலிமையையும் ஆறுதலையும் வழங்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகவும், வி.எஸ்.பாபுவின் பொதுவாழ்வுப் பணிகளும் நினைவுகளும் என்றும் நிலைத்திருக்கும் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam