Enter your Email Address to subscribe to our newsletters

ஆம்பூர், 19 நவம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட
சின்னகொம்மேஸ்வரம் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வந்த 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தொட்டியை அகற்றுவதற்கு முன்பாக மாற்று குடிநீர் வசதிகள் எதுவும் முறையாகச் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையடுத்து, தெருக்களில் ஓரிரு இடங்களில் மட்டும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இதனால், குறைந்த அளவில் கிடைக்கும் தண்ணீரைப் பிடிப்பதில் பொதுமக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில நேரங்களில் இந்தப் பிரச்சினை காவல் நிலையம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனால் அதிருப்தியடைந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவாயில் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தும், அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து தங்களது பிரச்சினைக்கு தீர்வு தெரிவிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அறிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V