Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)
சென்னை வழியாகத் தென் மாநிலங்களுக்கு அதிக அளவில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கடத்தல் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் தனிப்படையை அமைத்துக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்குள் வாகனங்கள் நுழையும் முக்கியப் பகுதிகளில் ஒன்றான மாதவரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அந்த வழியாகச் செல்லும் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த வாகனம் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர்.
இந்தச் சோதனையின்போது, வாகனத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பல பொட்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ரகசியப் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 70 கிலோ ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேசச் சந்தை மதிப்பு சுமார் ரூ.140 கோடி என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது, இந்தக் கடத்தலின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ள நபர்கள் மற்றும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பு குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V