Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 நவம்பர் (ஹி.ச.)
தலைநகர் டெல்லியில் குளிரின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், நடப்பு குளிர்காலத்தின் மிகக் குறைந்த காலை நேர வெப்பநிலை பதிவாகியுள்ளது.
டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
நடப்பு பருவத்திலும், இந்த மாதத்திலும் இதுவே மிகக் குறைந்த வெப்பநிலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
பதிவான வெப்பநிலையானது வழக்கமான அளவை விட 0.7 டிகிரி செல்சியஸ் குறைவாகும். அதேபோல், டெல்லியின் அயாநகர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 12.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
மேலும், டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும், பகல் நேரங்களில் மிதமான மூடுபனி காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காலையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெளியே செல்வோர் உரிய குளிர்கால ஆடைகளை அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவும் தொடர்ந்து கவலைக்குரிய நிலையில் உள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, காலை 8 மணி நிலவரப்படி நகரின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 238 ஆகப் பதிவாகியுள்ளது. இது மோசமான காற்றுத் தரப் பிரிவில் இடம்பெறுகிறது.
டெல்லியில் உள்ள 58 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளின்படி, 32 நிலையங்களில் காற்றின் தரம் மோசமான பிரிவிலும், 16 நிலையங்களில் மிதமான பிரிவிலும், 10 நிலையங்களில் மிகவும் மோசமான பிரிவிலும் பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஸ்ரீஃபோர்ட் பகுதியில் காற்றுத் தரக் குறியீடு 333 ஆக உயர்ந்துள்ளது.
குளிருடன் காற்று மாசுபாடும் இணைந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தேவையற்ற வெளிப்புற நடமாட்டத்தைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அடுத்த சில நாட்களிலும் குளிர் மற்றும் காற்று மாசுபாட்டின் தாக்கம் தொடரக்கூடும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V