Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 நவம்பர் (ஹி.ச.)
இந்திய விமானப்படை சார்பில் நடைபெற்று வரும் ‘சஹாயதா சேது 2026’ என்ற பேரிடர் நிவாரணப் பயிற்சியில், முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது
மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் என்பது இந்தியாவிலும், நமது அண்டை நாடுகளிலும் மனிதப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா கொண்டுள்ள அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும்.
பேரிடர்கள் அதிகம் ஏற்படக்கூடிய இன்றைய உலகில், ஒரு தனி அமைப்பால் மட்டுமே அனைத்து மீட்புப் பணிகளையும் திறம்பட மேற்கொள்ள முடியாது.
இதற்கு அரசு, முப்படைகள், தேசிய பேரிடர் மீட்புப் படை, துணை ராணுவப் படைகள், அரசு சாரா சிவில் அமைப்புகள், தொழில்துறை, தொழில்நுட்பத் துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் ஒருங்கிணைந்த பங்களிப்பும் அவசியமாகிறது.
‘சஹாயதா சேது 2026’ பயிற்சியில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுடன் இந்தியக் கடலோரக் காவல்படை , தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப் படை , மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். மேலும், நட்பு நாடுகளும் இந்தப் பயிற்சியில் இணைந்துள்ளன.
இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை மற்றும் ‘மகாசாகர்’ தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் பேரிடர் காலங்களில் உதவும் நம்பகமான முதல் மீட்பு நாடாக இந்தியா செயல்பட்டு வருகிறது.
இதற்கு துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் தோஸ்த்’, மியான்மரில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் பிரம்மா’ ஆகிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன என்று தெரிவித்தார்.
பேரிடர் காலங்களில் பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதும், அவசரகால மீட்புப் பணிகளுக்கான தயார்நிலையை வலுப்படுத்துவதும் இப்பயிற்சியின் முக்கிய நோக்கம் என்று பேசினார்.
Hindusthan Samachar / LOGESHWARI V