ரூ.1,070 கோடி திட்டங்கள் முடங்கியது ஏன்?- சித்திப்பேட்டை வருகையில் ரேவந்த் ரெட்டிக்கு BRS சரமாரி கேள்வி
தெலுங்கானா, 19 நவம்பர் (ஹி.ச.) தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சித்திப்பேட்டைக்கு வருகை தருவதை முன்னிட்டு, பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் தலைவர் ரவுலா ஸ்ரீதர் ரெட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் தொடங்கப்
Tgl


தெலுங்கானா, 19 நவம்பர் (ஹி.ச.)

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சித்திப்பேட்டைக்கு வருகை தருவதை முன்னிட்டு, பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் தலைவர் ரவுலா ஸ்ரீதர் ரெட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களைத் திறந்து வைப்பதற்கு முன்பாக, அவை தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவுலா ஸ்ரீதர் ரெட்டி,

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ரேவந்த் ரெட்டி எந்தத் தொகுதிக்கும் நேரில் சென்று ஆய்வு செய்யவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் உரிமை உள்ளது.

ஆனால், அவரது சித்திப்பேட்டை வருகையைச் சுற்றி ஏன் இவ்வளவு முக்கியத்துவமும் பரபரப்பும் ஏற்படுத்தப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், சித்திப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஹரிஷ் ராவ் ஏற்கெனவே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் முதலில் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, பிஆர்எஸ் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட ரூ.1,070 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் ஏன் நிறுத்தப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி ஏன் கோடங்கல் பகுதிக்கு மாற்றப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து விவசாயிகள் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் பலன் இன்னும் 22,816 விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

அதேபோல், விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் ரைத்து பரோசா திட்டமும் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என விமர்சித்தார்.

சித்திப்பேட்டை மக்களுக்கும் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், முதலமைச்சர் இன்று திறந்து வைக்க உள்ள பெரும்பாலான திட்டங்கள் முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டவை என்றும் ரவுலா ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V