Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 19 நவம்பர் (ஹி.ச.)
வீர சாவர்க்கர் குறித்து சோனியா காந்தி தனது சுயசரிதை புத்தகத்தில் விமர்சனக் கருத்துகளை தெரிவித்துள்ளதாகக் கூறி, சிவசேனா கட்சியினர் அந்தப் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கங்களைக் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிவசேனா தலைவரான சஞ்சய் நிருபம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வீர சாவர்க்கருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.
இதனால் மகாராஷ்டிரா மாநில மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், சாவர்க்கர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரரை திட்டமிட்டு அவமதிக்கும் முயற்சியாகவே காங்கிரஸின் செயல்பாடுகள் பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சோனியா காந்தி எழுதிய புத்தகத்தின் மீது தங்களுக்கு எந்தவிதமான தனிப்பட்ட எதிர்ப்பும் இல்லை என்றும், அதில் சாவர்க்கரை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள கருத்துகளே தங்களது எதிர்ப்புக்குக் காரணம் என்றும் கூறினார்.
இதன் அடிப்படையில்தான் சம்பந்தப்பட்ட பக்கத்தை மட்டும் கிழித்து அடையாளப்பூர்வமாகப் போராட்டம் நடத்தியதாக விளக்கமளித்தார்.
மகாராஷ்டிராவில் இந்தப் புத்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சாவர்க்கர் குறித்து அவதூறாக இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இரண்டு பக்கங்களையும் வெளியீட்டு நிறுவனமான ஹார்பர்காலின்ஸ் (HarperCollins) நீக்கும் வரை புத்தக விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, போராட்டத்தின்போது சிவசேனா நிர்வாகி ஷைனா என்.சி., பாலாசாகேப் தாக்கரேவின் புகைப்படத்தைக் கிழித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதற்கு விளக்கம் அளித்த சஞ்சய் நிருபம், உத்தவ் தாக்கரே சோனியா காந்தியிடமிருந்து அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டபோது புன்னகையுடன் இருந்த புகைப்படத்தை கிழித்து எதிர்ப்புத் தெரிவிப்பதே தங்களது நோக்கம் என்றார்.
ஆனால், எதிர்பாராத விதமாக ஷைனா என்.சி. வேறு புகைப்படத்தை எடுத்ததாகவும், அதில் பாலாசாகேப் தாக்கரேவின் படத்தை அவர் கிழிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மாறாக, சாவர்க்கருக்கு எதிராகத் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்த மணிசங்கர் ஐயரின் முகம் இடம்பெற்றிருந்த பகுதியைத்தான் கிழித்ததாக சஞ்சய் நிருபம் விளக்கமளித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V