தேனியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- 55 வயது நபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!
தேனி, 19 நவம்பர் (ஹி.ச.) தேனி மாவட்டம், போடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி ஒருவர், மூன்றாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் செல்லும் நேரங்களில், ஆண
Posco act


தேனி, 19 நவம்பர் (ஹி.ச.)

தேனி மாவட்டம், போடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி ஒருவர், மூன்றாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் செல்லும் நேரங்களில், ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய செல்வம் என்பவர் அவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரங்களைப் பயன்படுத்தி சிறுமியிடம் செல்வம் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பலமுறை இந்தக் கொடுமை நடந்ததில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், போடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தைக் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு தேனி மாவட்ட போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி எஸ். எழில் தீர்ப்பு வழங்கினார்.

அப்போது, குற்றம் சாட்டப்பட்ட செல்வம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும்படியான ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், குற்றவாளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் மெய்க்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தண்டனை விதிக்கப்பட்ட செல்வத்தைப் போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V