செவிலியர் பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு - தமிழக அரசு முக்கிய அரசாணை வெளியீடு!
சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக 1,695 தொகுப்பூதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடந்த நவம்பர் 18, 2026 அன்று மர
Arunraj


சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக 1,695 தொகுப்பூதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கான உத்தரவு கடந்த நவம்பர் 18, 2026 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில், அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பொதுமக்களுக்கு தடையற்ற மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த மாதம் 4,724 செவிலியர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு முறையான செவிலியர் பணி நியமனங்கள் நடைபெறாததால், மாநிலத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவியதாகக் கூறப்படுகிறது.

இதனால் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், கூடுதலாக 1,695 செவிலியர் பணியிடங்களை உருவாக்குவதற்காக ரூ.42.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, இரண்டு மாதங்களுக்குள் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவத் துறையில் மனிதவளத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு கடந்த ஜூலை 14ஆம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, புதிதாக ஏழு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, நடப்பு கல்வியாண்டில் 2,585 மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுள்ளது.

இந்தப் புதிய பணியிடங்கள் மூலம் செவிலியர் பட்டதாரிகளுக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான சேவைகளும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V