மாஃபியாக்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது -உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!
கோரக்பூர், 19 நவம்பர் (ஹி.ச.) உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாஃபியா செயல்களில் யாராவ
Yogi aadiyanath


கோரக்பூர், 19 நவம்பர் (ஹி.ச.)

உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாஃபியா செயல்களில் யாராவது ஈடுபட முயன்றால், அவர்களை அடியோடு ஒடுக்க அரசு தயங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அக்கட்சியை ரவுடித்தனம், அராஜகம், கலவரம் மற்றும் ஊரடங்கு போன்றவற்றுடன் தொடர்புபடுத்திப் பேசினார்.

மாஃபியாக்களுடன் அந்தக் கட்சியினர் நெருக்கமாக இருப்பதாகவும், பொதுமக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், சட்டத்தின் மூலம் மட்டுமே ரவுடிகள் மற்றும் மாஃபியாக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், தங்களது அரசு ஏற்கெனவே அவர்களின் அட்டூழியங்களைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

மீண்டும் இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜங்கஹா பகுதியிலிருந்து படிப்பதற்காக வந்த 12 முதல் 13 வயதுடைய சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார்.

அந்தச் சிறுவனுக்கு என்ன தவறு இருந்தது என்று கேள்வி எழுப்பிய அவர், சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவிக்கக்கூட எதிர்க்கட்சியினர் முன்வரவில்லை என விமர்சித்தார்.

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளதாகவும், முந்தைய நாள் சாலைகளில் வன்முறையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களைக் கண்டறிந்து கடுமையாகத் தண்டிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

ஏழைகளின் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் அல்லது பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு சிறை அல்லது நரகம் மட்டுமே காத்திருக்கும்; வேறு வழியில்லை என்றும் எச்சரித்தார்.

2027-ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் குறித்துப் பேசிய அவர், அராஜகத்தை ஏற்படுத்தி வாக்குகளைப் பறிக்கலாம் என நினைப்பவர்களை மக்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

தேர்தலைச் சந்திக்க விரும்புவோர் தயாராக இருக்கும் தேர்தல் களத்திற்கு வரலாம் என்றும் சவால் விடுத்தார்.

மேலும், ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டவர்களைத் தாக்கியவர்கள், இந்து மத நம்பிக்கையையும் அயோத்தியின் பெருமையையும் அவமதித்தவர்கள் தற்போது ராமரின் பெயரை உச்சரிப்பதாக விமர்சித்தார்.

ராமாயணத்தில் வரும் மாரீசனைப் போல வேடமிட்டு வருபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V