கடலூரில் 11 ஆயிரம் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு – பல லட்சம் ரூபாய் இழப்பால் பண்ணையாளர்கள் கவலை
கடலூர், 02 நவம்பர் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம், நஞ்சலிங்கம்பேட்டை, நொச்சிக்காடு, திருச்சோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன. ஆலப்பாக்கத்தில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் கடந்த அக்டோபர் 2
கோழி


கடலூர், 02 நவம்பர் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம், நஞ்சலிங்கம்பேட்டை, நொச்சிக்காடு, திருச்சோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன.

ஆலப்பாக்கத்தில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி முதல் கோழிகள் உயிரிழக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை சுமார் 4,000 கோழிகள் உயிரிழந்துள்ளன.

இதேபோல், திருச்சோபுரத்தில் மோகன் என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் அக்டோபர் 29-ம் தேதி முதல் இதுவரை 7,000 கோழிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், இரு பண்ணைகளிலும் சேர்த்து சுமார் 11,000 கோழிகள் உயிரிழந்துள்ளன. கோழிகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியாததால் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்தபோது, பண்ணைகளுக்கு நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டு, உயிரிழந்த கோழிகளை மண்ணில் புதைக்குமாறு அறிவுறுத்துவதாகப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, தீபாவளி விற்பனையை முன்னிட்டு வளர்க்கப்பட்ட கோழிகள் தற்போது உயிரிழந்திருப்பதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பண்ணையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, கோழிகள் உயிரிழப்பது உண்மைதான் என்றும், உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கோழிகள் உயிரிழப்புக்கான காரணம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியான பின்னரே அதற்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam