Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 02 நவம்பர் (ஹி.ச.)
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2026-27ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 40.6 சதவீதம் அதிகரித்து ரூ.25,548 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.18,165 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதேபோல், நிறுவனத்தின் மொத்த வருவாய் 27.8 சதவீதம் அதிகரித்து ரூ.3.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டு லாபமான EBITDA 23.9 சதவீதம் அதிகரித்து ரூ.62,409 கோடியாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகப் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சி லாப உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இந்தப் பிரிவின் செயல்பாட்டு லாபம் 67.9 சதவீதம் அதிகரித்து ரூ.25,203 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல், ஜியோவின் டிஜிட்டல் சேவைப் பிரிவிலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வருவாய் வளர்ச்சி காரணமாக லாபம் உயர்ந்துள்ளது.
மறுபுறம், ரிலையன்ஸ் சில்லறை வணிகப் பிரிவின் செயல்பாட்டு லாபம் 8.6 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இந்த நிதிநிலை முடிவுகள் முதலீட்டாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் எதிரொலியாக திங்கள்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 11.6 சதவீதம் வரை உயர்ந்தன. கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மிகப்பெரிய ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளன. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் மற்றும் தொலைத்தொடர்பு வணிகங்களில் ஏற்பட்ட வளர்ச்சி ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிதிநிலையை வலுப்படுத்தியுள்ள நிலையில், அடுத்த காலாண்டுகளில் சில்லறை வணிகம் மற்றும் புதிய எரிசக்தித் திட்டங்களின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P