Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 02 நவம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தாலுகா, பொட்டல், மலையான்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாடலிங்க சாஸ்தா கோயிலைச் சுற்றியுள்ள நிலங்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் விஸ்வநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமானவை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலங்களை கடந்த 1987-ஆம் ஆண்டு கோயில் அறங்காவலர்கள் எனக் கூறிக்கொண்ட சிலர் தனியாருக்கு விற்பனை செய்ததாகவும், இதையடுத்து தனியார் நிறுவனத்தினர் கோயிலுக்குச் செல்லும் வழிகளை மறித்து மின்வேலிகளை அமைத்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இதனால் பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மின்வேலிகளை அகற்றி பக்தர்களுக்குப் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், கோயில் நிலங்களைப் பாதுகாப்பதில் கோயில் நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் அலட்சியமாகச் செயல்படுவதாகக் கருத்து தெரிவித்தனர்.
மேலும், கோயில் நிலங்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுவதாகவும், முன்னோர்கள் கோயில்களுக்கு நிலங்களை வழங்கியது பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி கோயிலுக்கு வந்து நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்வதற்காகத்தான் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதனைத் தொடர்ந்து, கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை 4 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மனு தொடர்பாக அரசுத் தரப்பில் உரிய அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P