Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.)
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு 3 நாட்கள் காவல்துறை விசாரணைக்கு அனுமதி வழங்கி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அன்பில் மகேஸிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, இன்று மதியம் 1 மணி முதல் வரும் 4-ம் தேதி மாலை 5 மணி வரை காவல்துறை விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னதாக அன்பில் மகேஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணையின்போது அவரது வழக்கறிஞர் பி.கே.பாபு உடனிருக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், விசாரணை நடைபெறும் இடத்திலிருந்து விசாரணையைக் கேட்க முடியாத தொலைவில் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
அதேபோல், விசாரணையின்போது அன்பில் மகேஸை மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்றும் காவல்துறைக்கு நீதிபதி தெளிவான உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையே, அன்பில் மகேஸ் தாக்கல் செய்த ஜாமின் மனு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைத் திரும்ப வழங்கக் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நீதிமன்ற அறையிலிருந்து அன்பில் மகேஸ் காவல்துறையினரின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
Hindusthan Samachar / LOGESHWARI V