ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.) அரியலூர் மாவட்டம், தளவாய் அருகே மது போதையில் இருந்த இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசனின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
Thirumavalavan


சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.)

அரியலூர் மாவட்டம், தளவாய் அருகே மது போதையில் இருந்த இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசனின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.5 லட்சம் இழப்பீட்டை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தளவாய் அருகே உள்ள ஆதனக்குறிச்சியில்,

கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மது போதையில் இருந்த இளைஞர்களால் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் தாக்கப்பட்டார்.

இதில் படுகாயமடைந்த அவர், தஞ்சாவூர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செந்துறை ஒன்றியம், நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், ஏற்கெனவே தனது மனைவியை இழந்தவர் என்றும், குறைந்த ஊதியத்தில் பணியாற்றி தனது இரண்டு குழந்தைகளையும் பராமரித்து வந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது தந்தையையும் இழந்துள்ள அந்த இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் பிணையில் வெளியே வராத வகையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மது மற்றும் போதைப்பொருட்களால் இளம் தலைமுறையினர் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கிராமப்புறங்களில் சாதி மற்றும் மதத்தின் பெயரால் ஏற்படும் வன்முறைகளுக்கும் போதைப் பழக்கம் ஒரு காரணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைக்கு அடிமையாகும் இளைஞர்களால் அவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுவதுடன், இளம் தலைமுறையினரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, மதுக்கடைகளைப் படிப்படியாக மூடுவதற்கும், போதைப்பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி அவற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்கும் தமிழக அரசு பொறுப்புணர்வுடன் செயல்திட்டங்களை வகுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், வெங்கடேசனின் இரண்டு குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V