Enter your Email Address to subscribe to our newsletters

உத்திரபிரதேஷ், 02 நவம்பர் (ஹி.ச.)
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறும் பிரம்மாண்டமான தீபோத்சவ விழா, ஆன்மிக நம்பிக்கைக்கு மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய உத்வேகத்தை அளித்து வருவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அயோத்தியில் ஏற்றப்படும் ஒவ்வொரு தீபமும் மண்பாண்டத் தொழிலாளர்களின் உழைப்பு, விவசாயிகளின் விளைபொருட்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு புதிய ஒளியை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு அயோத்தியின் இந்தப் பண்பாட்டுச் சிறப்பையும் ஆன்மிக முக்கியத்துவத்தையும் உள்ளூர் கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் பொருளாதார முன்னேற்றத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆன்மிக நம்பிக்கையின் வலிமையை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய வாய்ப்புகளாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வை அப்போது இல்லை என்றும் யோகி ஆதித்யநாத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் இரட்டை எஞ்சின் அரசு, அந்த நிலையை மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான தீபங்கள் ஒளிரும் பிரம்மாண்டமான தீபோத்சவ விழா, மண்பாண்டத் தொழிலாளர்கள், உழைப்பாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும் வணிக வாய்ப்புகளையும் உருவாக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அயோத்தியின் பாரம்பரியம் மற்றும் ஆன்மிகச் சிறப்பை முன்னிறுத்தி நடத்தப்படும் இந்த விழா, உள்ளூர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பங்களித்து வருவதாக யோகி ஆதித்யநாத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V