பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ள இடத்தில் சேதமடைந்த 96 வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை இடிக்க டெண்டர்
சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் சட்டமன்ற வளாகத்துடன் கூடிய புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய வளாகத்தை அமைக்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட
New Secratrate


சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் சட்டமன்ற வளாகத்துடன் கூடிய புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய வளாகத்தை அமைக்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள சேதமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை அகற்றுவதற்குத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் டெண்டர் கோரியுள்ளது.

அரசாணையின்படி, சென்னை மாவட்டம் மயிலாப்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட R.S.No.4593/1, 4593/29 மற்றும் 4593/33 ஆகிய சர்வே எண்களிலும், Block No.102 பகுதியிலும் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ளது. சட்டமன்றக் கட்டடமும் இந்த வளாகத்தின் ஒரு பகுதியாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படலாம் என்ற கவலையை முன்வைத்து அவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இதன் முதற்கட்டமாக, சர்வே எண் 4593/33-ல் அமைந்துள்ள 3.82 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள 96 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிப்பதற்குத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தற்போது ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியுள்ளது.

இதன் மூலம் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன.

குடியிருப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V