Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 02 நவம்பர் (ஹி.ச.)
இந்திய கடற்படையின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், புதிதாக 8 போர்க்கப்பல்களை (NGC) உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்தங்களின்படி, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் (GRSE) நிறுவனம் 5 போர்க்கப்பல்களையும், கோவா ஷிப் யார்டு (GSL) நிறுவனம் மீதமுள்ள 3 போர்க்கப்பல்களையும் கட்டமைக்க உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., இந்தத் திட்டம் இந்தியாவின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் திறனில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஏனெனில், இந்தியக் கடற்படையால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, போட்டி அடிப்படையிலான தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்கள் (DPSUs) மூலம் கட்டமைக்கப்படும் முதல் திட்டமாக இது அமைகிறது.
இந்தப் புதிய போர்க்கப்பல்களில் நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற உள்ளன. குறிப்பாக, அதிநவீன ஏவுகணைகள், ஆயுதங்கள் மற்றும் கண்காணிப்பு உணர்வி அமைப்புகள் (Sensors) பொருத்தப்பட உள்ளன.
இதன் மூலம் வான், கடல் மேற்பரப்பு மற்றும் கடலுக்கு அடியில் எனப் பல்வேறு தளங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் திறன் இந்தக் கப்பல்களுக்கு கிடைக்கும்.
இந்தக் கப்பல்கள் இந்தியக் கடற்படையில் இணைக்கப்படுவதன் மூலம் நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சர்வதேச கடல் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாத்தல், எதிரி கப்பல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள், நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து எதிர்கொள்ளுதல், கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோரப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளுக்கு இவை உதவும்.
மேலும், கடல் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதுடன், இந்தியாவின் கடல்சார் இருப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தக் கப்பல்கள் செயல்படும்.
இந்தத் திட்டம் உள்நாட்டு கப்பல் கட்டுமானத் தொழில்துறைக்கும் பெரும் ஊக்கமளிக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) உள்ளிட்ட இந்தியத் தொழில் கூட்டாளிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பும் இதன் மூலம் அதிகரிக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில், இந்தக் கப்பல்களின் கட்டுமானப் பணிகள் மூலம் கப்பல் கட்டும் தளங்களில் சுமார் 72 லட்சம் நபர் வேலை நாட்களும், உதிரிபாகங்கள் தயாரிக்கும் துணைத் தொழில்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் சுமார் 460 லட்சம் நபர் வேலை நாட்களும் உருவாகும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V