அமெரிக்கா பழைய சிந்தனையில் சிக்கியுள்ளது-எதிர்காலத்தில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்
வாரணாசி, 02 நவம்பர் (ஹி.ச.) உலகளாவிய கருத்தரங்கில் பேசிய அமெரிக்கப் பொருளாதார நிபுணரும் வெளியுறவுக் கொள்கை வல்லுநருமான ஜெஃப்ரி சாக்ஸ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இன்னமும் பழைய ஆதிக்க மனப்பான்மையிலேயே இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும்,
Var


வாரணாசி, 02 நவம்பர் (ஹி.ச.)

உலகளாவிய கருத்தரங்கில் பேசிய அமெரிக்கப் பொருளாதார நிபுணரும் வெளியுறவுக் கொள்கை வல்லுநருமான ஜெஃப்ரி சாக்ஸ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இன்னமும் பழைய ஆதிக்க மனப்பான்மையிலேயே இருப்பதாக விமர்சித்துள்ளார்.

மேலும், 2100-ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,

அமெரிக்கா 1950-களின் சித்தாந்தத்தில் சிக்கியுள்ளது.

அமெரிக்க அதிபரும் தனது வளர்ச்சியில் சுமார் மூன்று வயதுக் குழந்தையின் மனநிலையில் இருப்பது போன்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளார்.

அமெரிக்காதான் உலகிற்குத் தலைமை தாங்க வேண்டும் என்பதே அவரது உலகப் பார்வையாக உள்ளது.

ஐரோப்பாவும் இதே மனநிலையில்தான் இருக்கிறது. மேற்கத்திய நாடுகள்தான் உலகின் தலைவர்கள் என்ற எண்ணத்தில் அவை தொடர்ந்து செயல்படுகின்றன.

குறிப்பாக, பிரிட்டன் இன்னமும் ஒரு பேரரசாகவே தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறது. உடலின் ஓர் உறுப்பை இழந்த ஒருவர், அந்த உறுப்பு இருப்பது போன்ற உணர்வை நீண்ட காலம் கொண்டிருப்பார்.

அதுபோல, பிரிட்டனும் தனது பழைய பேரரசு மனநிலையிலிருந்து இன்னும் விடுபடவில்லை” என்று விமர்சித்தார்.

தற்போதைய போர்களுக்குப் பின்னணியிலும் அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவில் ரஷ்யாவுடனான மோதல் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பதாகக் கூறினார்.

மேலும், சில நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் எண்ணமே மோதல்களுக்கு வழிவகுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2100-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு

எதிர்கால உலகின் மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசிய ஜெஃப்ரி சாக்ஸ்,

2100-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் சுமார் முக்கால் பங்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக மக்கள் தொகையில் ஆப்பிரிக்காவின் பங்கு சுமார் 30 சதவீதமாக இருக்கும். உலகப் பொருளாதாரத்திலும் அந்தக் கண்டத்தின் பங்கு இதே அளவை நெருங்கக்கூடும்.

ஆசியாவின் மக்கள் தொகை உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் சற்றுக் குறைவாக இருக்கும். சீனாவின் மக்கள் தொகை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.

நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட இரு மடங்காக இருக்கக்கூடும். இது வியப்பளிக்கும் மாற்றமாகும்.

மேலும், இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் வாய்ப்பும் உள்ளது. இவை உலகின் நீண்டகாலப் போக்குகளின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் குறைந்து, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V