பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் – பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு தினத்தில் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.) நவம்பர் 2-ம் தேதி அனுசரிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனை கிடைக்காமல் போவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பத்திரிகைச் சுதந்திரத்தையும் பத்திரிகையாளர்களின் பாதுகாப
Selva perunthafai


சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.)

நவம்பர் 2-ம் தேதி அனுசரிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனை கிடைக்காமல் போவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பத்திரிகைச் சுதந்திரத்தையும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத்துறையும், உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பத்திரிகையாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டியது ஒவ்வொரு ஜனநாயக நாட்டின் அடிப்படைக் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகைச் சுதந்திரம் என்பது வெறும் உரிமை மட்டுமல்ல; அது மக்களின் குரலாகவும், சமூகத்தின் மனசாட்சியாகவும் விளங்குகிறது எனத் தெரிவித்துள்ள அவர், உண்மைகளை வெளிக்கொணரும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் மற்றும் கொலைகள் ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலனுக்காகப் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பும், சுதந்திரமான பணிச்சூழலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கருத்துச் சுதந்திரமும் ஊடகச் சுதந்திரமும் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகம் வலிமை பெறும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பத்திரிகைச் சுதந்திரத்தையும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் காப்பதுடன், அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு தின வாழ்த்துகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V