தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி கவலை அளிக்கிறது – வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை விமர்சனம்
சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் வசூல் செயல்பாடு கவலை அளிப்பதாகவும், இது மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தமிழக வெற்றிக் கழக அரசின் வருவாய் ஈட்டும் திறன் குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் வீ த லீடர்ஸ் அமைப்ப
Annamalai


சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் வசூல் செயல்பாடு கவலை அளிப்பதாகவும், இது மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தமிழக வெற்றிக் கழக அரசின் வருவாய் ஈட்டும் திறன் குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அணணாமலை தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி காணப்பட்டாலும், அது ஒற்றை இலக்கத்திலேயே இருப்பது போதுமானதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். பண்டிகைக் காலம், பள்ளி விடுமுறைகள், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் வருவாய் வளர்ச்சி குறைவாக இருப்பது கவலை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் ஜிஎஸ்டி வருவாயில் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும் நிலையில், தமிழக அரசும் வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த 6 மாதங்களாக அரசின் பல்வேறு துறைகளில் மூலதனச் செலவினங்கள் குறைந்துள்ளதாகப் பொதுவான கருத்து நிலவுவதாகவும், இதனால் பொருளாதாரச் சுழற்சி பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அரசின் மூலதனச் செலவினங்களை அனைத்துத் துறைகளிலும் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் மொத்தத் தொழிற்சாலைகளில் 15.43 சதவீதத்தைக் கொண்டு தமிழகம் முதலிடத்தில் இருந்தாலும், மொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) தமிழகத்தின் பங்களிப்பு 10.26 சதவீதமாக மட்டுமே இருப்பதால், தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக உற்பத்தித் துறையின் தேசிய மதிப்புக் கூட்டலில் தமிழகத்தின் பங்களிப்பு பெரிய அளவில் மாறாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத் திட்டக்குழு வெளியிடும் பிராந்திய ஏற்றத்தாழ்வு அறிக்கைகள் மட்டுமே தமிழகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்காது என்றும், பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கப் பின்தங்கிய மாவட்டங்களுக்கு அரசு சிறப்புத் திட்டங்களையும் கூடுதல் கவனத்தையும் வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V