த.வெ.க ஆட்சியில் அடுத்தடுத்து லஞ்சப் புகார்கள் ,இது தூய சக்தியா? தீய சக்தியா? – வானதி சீனிவாசன் கேள்வி
சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் அரசு செவிலியரின் இடமாறுதலுக்காக ரூ.15 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக வெளியான ஆடியோ விவகாரம் மற்றும் இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக ரூ.5 கோடி வரை பே
Vanathi srinivasan


சென்னை, 02 நவம்பர் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் அரசு செவிலியரின் இடமாறுதலுக்காக ரூ.15 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக வெளியான ஆடியோ விவகாரம் மற்றும் இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக ரூ.5 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ள விவகாரம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, தவெக அரசுக்கு பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தென்காசி மாவட்ட தவெக மத்திய மாவட்டச் செயலாளர் ராஜபிரகாஷ் என்பவர், திருவாரூரில் பணியாற்றும் அரசு செவிலியர் ஒருவரின் இடமாறுதலுக்காக ரூ.15 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக வெளியாகியுள்ள ஆடியோ விவகாரம் ஒருபுறம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக தன்னிடம் ரூ.5 கோடி வரை லஞ்சம் கொடுக்கப் பேரம் பேசப்பட்டதாகவும், இந்த விவகாரம் லயோலா மணிக்குத் தெரியும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்தடுத்து வெளியாகும் இத்தகைய புகார்கள், தமிழக அரசியலில் தங்களைத் தூய சக்தி எனக் கூறிக்கொள்ளும் தவெக அரசின் ஊழல் முகத்திரையைக் கிழித்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

திரைப்படங்களில் ஊழலுக்கு எதிராக வசனங்கள் பேசியதுடன், முதலமைச்சரான பிறகு சுதந்திர தின உரையிலும் தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவது விடுதலைக்கு இணையானது என்று பேசிய முதல்வர் விஜய், தற்போது தனது கட்சியிலும் பொதுவெளியிலும் அடுத்தடுத்து எழும் லஞ்சப் புகார்களைக் கண்டும் காணாமல் இருப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்கப் பேரம் பேசப்பட்டதாகக் கூறியுள்ள அமைச்சர் ராஜ்மோகன், அந்த நபர் யார், யாருடைய பெயரில் பேரம் பேசப்பட்டது, எப்போது பேசப்பட்டது, அதற்கான ஆதாரங்கள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய புகார் அளித்து, அதற்கான ஆதாரங்களை விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைத்து, சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேடைகள் தோறும் ஊழலை ஒழிப்போம் என்று முழங்கிவிட்டு, ஊழல் புகார்கள் தங்கள் வீட்டு வாசலிலேயே வந்து நிற்கும்போது தவெக அரசு மௌனம் காப்பதாக விமர்சித்துள்ள வானதி சீனிவாசன், இப்போது சொல்லுங்கள், இது தூய சக்தியா? தீய சக்தியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V